கவிதை
விலங்கினங்களிலேயே
ஒரு தினுசான,
உயரிய விலங்கு நாம்.
ஹோமோ செப்பியன்ஸ் என்ற அடைமொழி நமக்குண்டு.
உயர்ந்த அறிவாளி என்று
நம்மை நாமே பிதற்றித் திரிவோம்.
காடு மலைகள் கடந்து பெருநகரங்களில்
குடிபெயர்ந்திருக்கிறோம்.
மானுடம் வளர்த்த பெருமை
மொத்தமும் நம்மையே சேரும்.
குழுக்களாகப் பிரிந்தோம்.
இனங்களாகப் பிரிந்தோம்
ஒவ்வொன்றாக கண்டறிந்தோம். அறியாமையின் ஆடுகளத்தில் இறைவனை மையமாக்கினோம்.
கண்டங்களைக் கண்டறிந்தோம். நாடுகளை வரையறுத்தோம்.
சாதியை உருவாக்கினோம். மதங்களைக் கொணர்ந்தோம்.
பெரு வணிகர்களைப் பெருக்கினோம்.
நாகரிகம் அடைந்தோம்.
போர்கள் செய்தோம்.
புரட்சி செய்தோம். இனப்படுகொலைகள் செய்தோம். வன்புணர்வுகள் செய்தோம்.
கவிதைகள் செய்தோம்.
காவியங்கள் எழுதினோம். பெண்மையை மிதித்தோம். பெயரளவில் துதித்தோம்.
ஜனநாயகம் அமைத்தோம். நீதிமன்றங்கள் கட்டினோம்.
அரசியல் வளர்த்தோம்.
அரசியல் செய்தோம்.
சாதகமான இடத்தில்
இருந்துகொண்டு
எல்லாம் சரியென்றோம்.
பாதகமான படுஞ்செயலை
சட்டமென மாற்றி சரி செய்தோம்.
ஆண்ட பரம்பரை ஆளட்டும்
மற்ற பரம்பரை சாகட்டுமென
மனித மாமிச விற்பனையை
விரைவில் சட்டமாக்குவோம்.
விலங்கினங்களிலேயே
ஒரு தினுசான,
உயரிய விலங்கு நாம்.
Comments
Post a Comment