அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு


அன்பின் எழுத்தாளர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு, 
நீங்கள் உயிரோடு இருக்கும்போது உங்கள் படைப்புகளைப் படித்து விட்டு இப்படி ஒரு கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்க வேண்டும். அதனாலென்ன மறைந்த கலைஞர் பாலுமகேந்திராவை பார்த்து நீங்கள், இங்கு தானே இருக்கிறீர்கள்? காலத்தை வென்று நிற்கப் போகும் உங்கள் படைப்புகளை மரணத்தால் என்ன செய்துவிட இயலும் என்று கூறியது போல தம்பி முத்துக்குமார், உங்கள் படைப்புகள் இருக்கும் வரை நீங்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்தை தொடராக ஆனந்த விகடனில் நான் படித்ததில்லை. புத்தகமாக முழுமூச்சுடன் படித்தேன். 
          எளிய விஷயங்களும், எளிய வார்த்தைகளும், எளிய மனிதர்களும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை.
          இந்த வாழ்க்கையில் நாம் வேடிக்கை பார்ப்பதற்கும் இந்த வாழ்க்கைக்குள் நம்மையே நாம் வேடிக்கை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உண்மையில் இலக்கியம் படிப்பவர்கள் அனைவராலும் இவ்வித்தியாசத்தை அறிந்துகொள்ள இயலுமா என்றுத் தெரியவில்லை. 'வேடிக்கை பார்ப்பவன்' எழுதிக் கொண்டிருக்கும் போது, 'அப்பா என்ன எழுதுகிறீர்கள்?' என்று கேட்ட மகனுக்கு, 'வாழ்க்கை வரலாறு எழுதுகிறேன் மகனே' என்று கூறியதற்கு, வாழ்க்கைனா என்னப்பா? வரலாறுனா என்னப்பா?'என்று கேட்ட மகனுக்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்று தெரியாமல் தவித்த உங்களைப் போலத்தான் பலரும் தவித்துக் கொண்டே இருக்கிறோம். இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் நானும் என்னைப் போன்ற பலரும் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கி இருக்கிறோம்.
           மனிதர்களுக்குத்தான் இவ்வாழ்வின் மீது எத்தனையெத்தனை ஆசைகள்? வாழ்க்கை ஒவ்வொரு ஜன்னலையும் திறக்கும்போதும் நட்சத்திர குவியல்களால் நிறைகிறது மனது.  திறக்கப்படாத தாழிட்ட கதவுகளுக்கு முன்னால் வரம் வேண்டி நிற்கிறோம். சினிமாக் கனவு, விளையாட்டுக் கனவு, படிப்புக் கனவு, காதற் கனவு, திருமணக் கனவு என்று விதவிதமான கனவுகளுடன் இவ்வாழ்வை வலம் வந்து கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தைக் கூட கடவுளின் துணை கொண்டு மற்றொரு முறை பார்த்து விட்டு வந்து விடலாம் எக்காரணம் கொண்டும் எதிர்காலம் தெரிந்துவிடக்கூடாது என்று அவசர அவசரமாக ரயிலிலிருந்து இறங்கிய உங்களைப் போலவே பலரும் பல்வேறு ரயில் நிலையங்களில் நிகழ்காலத்தை பற்றிக்கொள்ள காத்துக்கிடக்கிறார்கள்.
        பெரியவளாகி என்னவாகப் போகிறாய்? என்றால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்வாள் என் இளைய மகள். பூ விற்பவள், மீன் விற்பவளிலிருந்து தொடங்கி விண்வெளி ஆராய்ச்சியாளர்வரை எல்லாவற்றையும்  சொல்வாள். அப்படி நீங்கள் சொன்ன எல்லாவற்றிற்கும் துணைநின்ற நான் கண்டிராத உங்களின் அப்பாவின் உருவம் மனதில் நிறைகிறது. இப்படியான உறவு வாய்ப்பது வரம். 
        புகைப்பட கலைஞராக நீங்கள் உருவெடுத்திருந்த காலத்தில் அவசர அவசரமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அழைத்துச் சென்ற அந்த மரண வீட்டில் கண் திறந்து கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த எட்டு வயது பிள்ளையின் கண்கள் இந்த உலகத்தில் அவநம்பிக்கையை போதாமையை உரைத்தது என்றும், பல்வேறு விழாக்களில் புகைப்படத்திற்கு சிரிக்க முற்படும்போது அந்த கண்களே மனதுக்குள் தெரிகிறது என்றுரைத்த வரிகள் வாழ்வில் நாம் சந்திக்கும் அவ நம்பிக்கைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கழுத்தை நெரிப்பது போன்றதொரு உணர்வைத் தந்தது. 
           எல்லாவற்றிலுமிருந்து மீள,
போதாமைகளிலிருந்து, அவநம்பிக்கைகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க, ரத்தம் வழியும் சிராய்ப்புகளிலிருந்து  நம்மை ஆறுதல் படுத்திக் கொள்ள இலக்கியமும் கவிதைகளும் ஒருவேளை உதவலாம் என்று எண்ணும் அசாதாரணமானவர்களில் நானும் ஒருத்தியாக இருப்பதால் இந்த புத்தகத்தை என் மனதிற்கு மிகுந்த நெருக்கமாக உணர்கிறேன். ஒரு கவிஞன், என்ன எழுதவேண்டும் என்பதை தானே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று கூறி எடுத்துக்காட்டாகக் கூறிய கவிஞர் சுந்தர ராமசாமியின் கவிதையும், வாடகை வீட்டிலா இருக்கிறாய்? என்று யாரோ அவமானப்படுத்த 'அப்பா, வாடகை வீடுனா என்னப்பா?' என்ற மகன் கேட்க நீங்கள் சுட்டிக்காட்டிய மலையாளக் கவிஞர் ஸ்ரீவத்ஸனின் கவிதைகளும் மனப்பரப்பெங்கும் நிறைந்து கிடக்கின்றன. 
          அதிகம் உணர்ச்சி வசப்படுபவபவர்கள் கலைஞர்களாக இருக்கிறார்களா? இல்லை பெரும்பாலும் கலைஞர்களே அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. அழுவதிலும் உணர்ச்சி வசப்படுவதாலும் ஆண் பெண் பேதம் இருக்கிறதா? என்பது உட்பட பலவற்றையும் கேள்வி கேட்பவராகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். பள்ளி கல்லூரி என்றவுடனேயே உங்களுக்கு நினைவில் வருவது அவ்வளாகத்திலுள்ள மரங்களும் நூலகங்களும் என்பது 
இயற்கையையும் புத்தகங்களையும் 
உங்கள் வாழ்வு எவ்வளவு நிறைத்திருந்தது என்பதை பற்றி அறிய இயன்றது. 
            பத்தாம் வகுப்பு படிக்கும் போது நீங்கள் வெளியிட்ட தூசி என்ற புத்தகம் உட்பட நீங்கள் எழுதிய அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் முளைத்திருக்கிறது. தூர்வாரப்படாத மனித மனங்களை சுட்டிக்காட்ட எப்போதும் ஒரு நா. முத்துக்குமார் தேவைப்படுகிறார். இந்த காகிதம் உறிஞ்சிக் கொள்ளும் பேனா மையைப் போல உங்கள் கவிதைகளை மனத்தில் ஏந்திக்கொண்டு இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன், கடிதத்தை நீங்கள் எங்கிருந்தோ படிக்கக்கூடும் என்ற நம்பிக்கையோடு. ஒரு உண்மைக் கலைஞன் மரிப்பதில்லை. 
அன்புடன் 
ஹேமா...

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு