அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு, 
நலம். நலமறிய விழைகிறேன். இந்த உலகிலேயே மிக சிக்கலான விஷயம் என்னவென்று கேட்டால் எனக்கு ஏனோ 'மனித மனம்' என்றுதான் தோன்றுகிறது. மனித மனத்தின் குறுக்குவெட்டுப் பாதையை கூர்மையாக அறிந்தவர்கள் என்று யாரையும் கூறிவிடமுடியாது. எல்லாமும் பிழைகளும் கற்றலுக்குமான உத்திகள்தான். 

மனித மனதின் உணர்வுகளை, சூழ்ச்சிகளை, வீழ்ச்சிகளை, உன்மத்தங்களை, வக்கிரங்களை, உண்மைகளை, பொய்மைகளை, காரண காரியங்களை, சமயோசிதங்களை ஓர் உளவியல் மருத்துவரால் கூட சரியாக எழுதி விட முடியாது என்று எண்ணுகிறேன். மருத்துவத் துறையில் கால்பதித்திருக்கும் உங்களின் 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' உடலியல் கூறாய்வைப் போன்ற மனக் கூறாய்வு. உடலை கூறு போட கற்றுக் கொள்வதற்கு மருத்துவத்துறை நமக்கு பயிற்சி அளிக்கலாம். மனக்கூறாய்விற்கு நாம் மனத்தை விரிவு செய்திருக்க வேண்டும். பழக்கியிருக்க வேண்டும். முதிர்ச்சி அடைய அல்லது பக்குவப்படுத்தியிருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். 

ஒரு நாவலில் இவ்வளவு சுவாரஸ்யத்தை அடுக்க விட இயலுமா? உளவியலை, மனதின் போக்கை அழுத்தமாக பதிவு செய்வதற்கு ஒரு மிகப்பெரிய திண்மை வேண்டும். எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் நான் அதை கண்டிருக்கிறேன். 

மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு பெரும் சாபமாக ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் இவ்வகையான தேர்வுகளில் பிள்ளைகளுக்குத் தரும் பயம், இக்கட்டு, இனம்புரியாத வலி, தோல்வி மனப்பான்மை என அவர்கள்தம் துயர்களை பல இடங்களில் சுட்டியிருக்கிறீர்கள். 

வாழ்வில் அரசியலற்ற இடம் என்று எங்குமே கிடையாது. எல்லா இடங்களிலும் அவ்விடத்திற்கு தகுந்தார் போல் ஏதேனும் ஒரு அரசியல் நிலவத்தான் செய்கிறது. இந்நாவல் நெடுகிலும் மருத்துவத்துறையில் சில இடங்களில் நடக்கும் அரசியலை பெரிய மசாலாக்கள் இல்லாமல் உள்ளபடியே கட்டவிழ்த்திருக்கிறீர்கள். உண்மையில் பல இடங்களில் இந்நாவலை புனைவு என்று நம்புவதற்கு மனம் மறுக்கிறது. 

நாவலை நகர்த்தும் விதம் அதிலும் அந்த கடைசி அத்தியாயம் உங்கள் மற்ற புத்தகங்களை என்னை தேட வைத்திருக்கிறது. எவ்விடத்திலும் தொய்வில்லாத எழுத்து, அகத்தை தொடர்ந்து கேள்வி கேட்கும் கர்மசிரத்தை உங்கள் நாவலை தூக்கிப் பிடித்திருக்கிறது என்று எண்ணுகிறேன். 

'முன்னரும் சரி இப்போதும் சரி நீ என்னை என்னவாக நினைக்கிறாயோ நான் அதுவல்ல' நாவலின் வழியாக தத்துவங்களும், காலத்தில் நீட்சியில் திசை மாறும் எண்ணங்களும், அதைக் கொண்டு செல்லும் விதமும் ஓர் எழுத்துக்காரனாக உங்களை உரிய இடத்தில் சேர்க்கும் என்று நம்புகிறேன். 

ஒரு கேள்விக்கான பதிலாக நாம் என்ன சொல்கிறோம் என்பதையும் விட நாம் எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. ஆனால் 'ஒரு பதிலுடன் சேர்ந்து வரும் ஒலி அழுத்தமும் உணர்ச்சியும்தான் அந்த பதிலுக்குப் பின்னிருக்கும் முற்றுப்புள்ளியை உறுதி செய்ய வேண்டும்' என்கிற வார்த்தைகளின் உள்ளொளியை நம் சக வாழ்வில் எவ்வளவு முறை அனுபவித்திருக்கிறோம். 

செய்யாத தவறுகளுக்காகவும் மனிதர்கள் சுமக்கும் குற்றவுணர்வு, அவற்றை செலுத்தும் பாதை, மனித மனத்தின் கபடங்கள், அதன் சுய கேள்விகள், தான்மட்டுமே உத்தமன் தான்மட்டுமே தலைவன் என்ற அகந்தை, அடுத்த மனிதனின் வாழ்வில் நமக்கே தெரியாமல் நாம் காட்டும் ஈடுபாடு அல்லது அக்கறையற்ற தலையீடு, பொதுபுத்தி, பழிவாங்கும் உணர்வு, எப்பாவத்திலிருத்தோ  தன்னை விடுவித்துக்கொள்ள பக்திமார்க்கத்தில் ஒழுகுவது... இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம் உங்கள் நூலின் அகக்கூறாய்வு அளித்த விஷயங்களை. 

மருத்துவத் துறையில் பெரும் பொறுப்பில் அமர்ந்துகொண்டு மருத்துவ மாணவர்களின் வாழ்வை பந்தாடும் ஒருசில அயோக்கிய சிகாமணிகளில் நீங்கள் குறிப்பிடும் 'சதாசிவம்' கதாபாத்திரத்திற்கு 'இவ்வெழுத்து அச்சில் வந்தால் அக்கிழவனுக்கு  என் கையெழுத்திட்டப் பிரதியை அனுப்ப வேண்டும்' என்ற கூற்று நடந்தேறியதா என்று தெரிந்துகொள்ள அத்தனை விருப்பம் எனக்கு. இது முழுமையாக புனைவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் நூல் அளித்த போதையிலிருந்து நான் வெளிப்படாததின் உச்சம் அது. 

உண்மையில் உங்கள் இந்த நாவல் எவ்வித போதையும் அல்ல.  நீங்கள் இந்நூலில் குறிப்பிட்டிருப்பது போல உடற்கூறாய்வின்போது அனைத்து பாகங்களையும் ஆராய்ந்து பின்னர் அவற்றை வயிற்றுக்குள் திணித்து தைப்பது போல பல்வேறு ஆய்வுகளின் 'தெறிப்பு' அல்லது 'திறப்பு' இந்நூல். 

ஒரு மருத்துவராக இருந்தும் ஒரு எழுத்துக்காரனாக உங்கள் முதுகில் நீங்கள் தூக்கிக் கொண்டிருக்கும் பளு மிக அதிகம். அந்த பளுவின் எடையை உங்கள் எழுத்துக்களில் நான் காண்கிறேன். 

'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' இதில் பிரபாகரன் என்னும் பெயரை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நம் தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்கைகளில் லாவகமாக ஒட்டிக்கொள்ளும் பெயரல்லவா அது. இந்த  உடல் (மனக்)கூறாய்வில்  உரத்துப் பேசும் விடைகள் வினாக்களின் அவசியமற்றக் கூர்மையை காத்திரத்தை மழுங்க செய்யட்டும். 

உங்கள் எழுத்தின் அடுத்த கட்டத்தை வாசிக்க ஓர் எளிய வாசகியாய் காத்துக்கொண்டிருக்கிறேன். 
அன்புடன் 
ஹேமா... 

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு