அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு,
நலம். நலமறிய விழைகிறேன். மலையாளத் திரையுலகின் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக திகழும் நீங்கள் எத்தனையோ திரைப்படங்களில் என் மனம் கவர்ந்தவர். ஒரே கடல் 
என்கின்ற திரைப்படத்தில் தொடங்கி பேரன்பு வரை உங்கள் நாயகத் தன்மையின் அழகியல் பலரையும் தொந்தரவு செய்யக்கூடியது. 'ஜாதி மல்லிப் பூச்சரமே' என்று பாடும் திரைப்பட நாயகன் மம்முட்டியின் மீது அவ்வளவு பிரேமம் எனக்கு. அதெல்லாம் ஒரு நாயகப் பிம்பம் அவ்வளவே. 

திரைப்படங்களை கடந்த 'முஹமது குட்டி' என்னும் மனிதனின் அசலான அக தரிசனம்தான் இந்த 'மூன்றாம் பிறை' என்னும் நூல். தன் வாழ்வில் பயணப்பட்ட சம்பவங்களின் வெறும் தொகுப்பாக அல்லாமல் தன் பிழைகளை, அகந்தையை, புரிதலற்றத் தன்மையை வாழ்வியல் சாரங்களோடுச் சேர்த்து எளிதில் காணக் கிடைக்காத மூன்றாம் பிறையாக எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள். 

'காழ்ச்சப்பாடு' என்னும் மலையாள மூலத்தில் வந்த இப்புத்தகம் சகோதரி ஷைலஜா அவர்களால் அத்தனை இலகுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காவிற்கு எனதன்பு. உண்மையில் நாயக பிம்பம் என்பது வெறும் திரையில் வரும் நடிப்பால் மட்டுமல்ல என்பதை நான் தமிழ் நடிகர்களை வைத்தே தெரிந்து கொண்டேன். திரையில் என் மனதிற்கு நெருக்கமான ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு எனக்கு அவர் மீதான நெருக்கத்தை முற்றிலுமாக குலைத்தது. ஒருவரின் மனம், நிலைப்பாடு அல்லது உண்மைத்தன்மை நாம் அவர்களை நெருங்குவதற்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அப்படி மனதிற்கு நெருக்கமான ஒரு நூலாக மாறிப் போனதுதான் இம்மூன்றாம் பிறை. 

தன் வாழ்வின் வெளிச்சமற்ற பகுதிகளை இவ்வளவு பட்டவர்த்தனமாக கூறும் உங்கள் புத்தகம் சிதம்பர நினைவுகள் என்னும் பாலச்சந்திரன் அவர்களின் புத்தகத்தை நினைவுபடுத்துகிறது. தன் இலையிலிருந்து அவியலை உங்கள் இலைக்குமாற்றிய பொந்தன் மாடனின் அன்பை நீங்கள் உணர்ந்தது போல இப்புத்தகம் நெடுகிலும் உங்கள் புரிதல் என்னை நெகிழ வைக்கிறது. 'யதார்த்த வாழ்வில் வில்லன் யார் ஹீரோ யார்' என்று முடியும் அத்தியாயத்தை நீங்கள் முடித்தபிறகும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது மனம். உங்கள் திரைப்பட நாயகப் பிம்பத்தை உடைத்து உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொண்ட அற்புத தருணமாக அதை உணர்கிறேன். 

பெரியதொரு தங்கச் சுரங்கத்திலிருந்து தேவைக்கு மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளும் மனது தங்கத்தைவிட வசீகரமானது என்னும் வார்த்தைகளில் அடர்த்தி பலரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 

எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் நாயர் பற்றிய உங்களது காணொலி ஒன்றை நேற்று முன்தினம் பார்த்தேன். கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்களுக்கு முன்பிருந்தே நீங்கள் அவர் புதினங்களை கொண்டாடித் தீர்த்தவர் என்பதும் நிதர்சனமே. 

இரண்டு ரூபாய் நோட்டை தன் வாகன வேகத்திற்கு சன்மானமாகக் கொடுத்த பெரியவரை நினைத்துப் பார்க்கும் உங்கள் உள்மனத்தில் திறப்பு அத்தனை விசாலமானது. 

ஒரு திரை நாயகனை மீறிய வாழ்வின் நிஜ நாயகனாக சமூகப் பார்வை கொண்ட ஒரு நல்ல மனிதனாக நான் உங்களைப் பார்க்கிறேன். 'வாழ்க்கை தர மறுக்கும் எல்லாவற்றையும் வாழ்ந்து வாழ்விடமிருந்து நான் வாங்கிக் கொள்வேன்'. இவ்வார்த்தைகள் ஏதோ ஒரு கவிஞனின் வார்த்தைகளாக நீங்கள் குறிப்பிட்டிருந்தவை. வாழ்வு அங்ஙனமே உங்களுக்கு அனைத்தையும் வாரி வழங்க வேண்டுகிறேன். முழு நிலவைக் காட்டிலும் மூன்றாம் பிறை பேரழகே.

அன்புடன் 
ஹேமா...

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு