அன்பின் எழுத்தாளர் பாமா அவர்களுக்கு,

அன்பின் எழுத்தாளர் பாமா அவர்களுக்கு, 
நலம். நலமறிய விழைகிறேன். கடந்த மூன்று நாட்களாக உங்கள் 'கருக்கு' புத்தகத்தோடே சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன். 

என் அப்பா கிராமத்தில் பிறந்தவர் என்றாலும் எனக்கும் கிராமத்திற்குமான தொடர்பு என்பது முற்றிலும் இல்லாத ஒன்று. ஓரிரு முறைகள் மட்டுமே என் அப்பாவின் கிராமத்திற்கு சென்றிருக்கிறேன் என்கிற முறையில் கிராமத்தைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. 

கடந்த மூன்று நாட்களாக என் அருகில் அமர்ந்து கொண்டு ஒரு கிராமத்தின் கதையை, அடித்தட்டு மக்களின் கதையை, உங்களின் கதையை என்னிடம் கூறியது போன்றதொரு உணர்வு. 

கிராமங்கள் சாதிய அடிப்படையில் எப்படி பிரிந்திருக்கிறது? ஒவ்வொரு சாதி மக்களும் பிற சாதி மக்களை எப்படி பார்க்கிறார்கள்? தனிமனித வடுக்கள், துயரங்கள், வாழ்வு இப்படி எல்லாவற்றையும் விஸ்தரித்து காட்டியிருக்கிறது உங்கள் எழுத்து. 

எழுத்தாளர் பிரபஞ்சன் இப்புத்தகத்தை பற்றிக் கூறும்போது அலங்காரம், ஆடம்பரம், அணிகலன்கள் எதுவும் இல்லாமல் உடைத்துக் கொண்டு கிளம்பும் ஊற்று மாதிரி வார்த்தைகள் வந்து விழுந்து இந்தத் தன் வரலாற்றை ஆக்கியிருக்கின்றன என்று கூறுகிறார். 

எழுத்தாளர் அம்பை இந்நாவலைப் பற்றிக் கூறும் போது கருக்கு வெறும் நாவலல்ல, அது பாமாவின் வாழ்க்கையில் பின்னோக்கி பார்க்கும் ஒரு கட்டம். ஆதரவற்று, எதிர்காலம் என்னவென்று தெரியாத, புரியாத ஒரு கட்டத்தில் தன்னை, தன் மக்களை தன் சமூகத்தை நினைத்துப் பார்க்கும் முயற்சி என்று கூறுகிறார். 

ஒரு பெண்ணின் எழுத்து புனைவுகளை எல்லாம் உடைத்துக்கொண்டு இரத்தமும் சதையுமான தன் வாழ்வை உண்மையை இவ்வளவு ஆழமாக இயல்பாக எடுத்துரைத்தது அத்தனை சிறப்பு. கருக்கு என்பது கருக்கல் என்னும் விடியலுக்கு முன்பான நேரத்தை குறிக்கும் என்பதை மட்டுமே அறிந்த எனக்கு கருக்கு என்பது கூரான பனை மட்டை என்பதே நானறியாத செய்தி. தன் வாழ்வை கருக்கு என்பதுடன் உருவகப்படுத்திய விதம் முழு நாவலின் வீரியத்தையும் நமக்கு சொல்லிவிடக் கூடும். 

பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம், மதம், சாதி, கடவுள் பக்தி, மடாலயங்கள், அங்கிருக்கும் மனிதர்களின் அசலான நிலைப்பாடு, ஓட ஓட துரத்தும் சாதி, சாதி என்ற ஒற்றை வார்த்தை தரும் அவமானம், குறுக்கீடு, வன்மம், குற்ற உணர்ச்சி, தன்மானப் பிரச்சினை, அந்த வாழ்வியலின் நசுக்கல்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ... உங்கள் எழுத்துக்களின் வழி நீங்கள் கடத்திய உணர்வலைகள். 

இறை சேவை என்பதும் பொருளாதாரம் சார்ந்த, சாதி சார்ந்த ஒன்றாக மாறிப் போவதும், அதில் உண்மையான மனிதர்கள் மனித சேவைக்கு பங்காற்ற இயலாமல் போவதும் எவ்வளவு துயரமானது. 

துயர்களை தாண்டியும் ஒவ்வொரு வாழ்வியலிலும் இனிக்கும் சின்ன சின்ன மகிழ்ச்சிகளையும் சொல்லத் தவறவில்லை நீங்கள்.  ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை கதைகள். உங்கள் வரிகள் அவ்வொவ்வொரு கதைகளுக்கும் வண்ணம் அளித்திருக்கிறது. நான் காணாத அந்த கிராமமும் நீங்களும் உயிர்ப்போடு என்கண்முன் நிற்கிறீர்கள். 

சாதிய வன்மம் நீங்காத இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற வார்த்தை எவ்வளவு அபத்தமானது. உங்கள் நாவலின் சில பகுதிகளை கண்ணீரோடும்  சில பகுதிகளை நையாண்டியோடும் வேறு சில பகுதிகளை புன்னகையோடும் பலவாறு கடந்து வந்தேன். 

ஒரு எழுத்தாளரை இவ்வளவு மானசீகமாக இதுவரை உணர்ந்ததில்லை. உங்கள் எழுத்துக்கள் உயிர் பெற்றிருக்கிறது, உயிர்த்தேயிருக்கும். எரிந்து சாம்பலாக வேண்டியது, சாம்பலாக்கப் படவேண்டியது சாதியும், சாதிய வன்மமும்தான். வாழ்த்துகள் அன்பு சகோதரி பாமா. நீடூடி வாழ்க.

என்றும் அன்புடன்
ஹேமா... 

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு