அன்பின் எழுத்தாளர் டாக்டர் ஷாலினி அவர்களுக்கு,

அன்பின் எழுத்தாளர் டாக்டர் ஷாலினி அவர்களுக்கு, 
                                     நலம். நலமறிய​ விழைகிறேன். உங்களை தொலைக்காட்சியின் வழியாக பரவலாக அறியும் முன்பே, விகடன் பிரசுரத்தின் பெண்ணின் மறுபக்கம் புத்தகம் வழியாக அறிந்திருந்தேன், ஆண் - பெண், பாலியல் போராட்டம், ஆதிமுதல் அந்தம் வரை என மானுட பெண்ணின் பல்வேறு பரிமாணங்களையும் எழுதியிருக்கிறீர்கள்.
                                   ஓர் உளவியலாளர் தன்னிடத்து வரும் நோயாளிகளை பாதுகாப்பது மட்டும் தன் வேலையில்லை, தொடர்ந்து பல்வேறு உளவியல் சிக்கல்களைப் பற்றியும், மனித குலத்தின் வரலாற்றைப் பற்றியும், மனித பெண்ணின் நிலை பற்றியும் எண்ணிலடங்கா விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவதும் தன் வேலையென்று செவ்வனே பணி செய்கிறீர்கள். 
                                 பெரியாரின் புத்தகத்தைப் படிக்கும் போது ஏற்படும் தெளிவும். துடிப்பும் உங்கள் புத்தகத்திலும் உங்கள் பேச்சிலும் இருப்பதை காண முடிகிறது. 
                                அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் என்றுரைத்தார் பாரதி. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் கவியல் தொடர்புடைய விடயங்கள் பெண்ணின் குணங்களல்ல என்று தொடர்ந்து விளக்க வேண்டியுள்ளது ஆண்களுக்கும் ஏன் பெண்களுக்குமேகூட. 
                               மகளிர் உரிமைக்காக பாடுபட்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை சட்டவிரோதமாக்கிய​ ராஜாராம் மோகன்ராய் அவர்கள். 
                              திருமணம் என்பது ஒரு வகை ஆதிக்கம். அதில் பெண் உழைப்பாளியாகவும், ஆண் எஜமானனாகவும் மாறிப் போகிறார்கள் என்று புரட்சி செய்த ஏங்கெல்ஸ். 
                            ஏங்கெல்ஸின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு ஆண்களுக்கு நிகரான பெண்களின் தர​த்தை உயர்த்திவர் தோழர் லெனின். 
                             பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் இந்தியாவின் முதல் கம்யூனிசத் தலைவர் சிங்காரவேலர். 
                              சிங்காரவேலரிடமிருந்து கம்யூனிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பெண்ணுரிமை பாடல்களை பாடி நமக்கு பரிச்சயமானவர் பாரதியார்.
                              சிங்காரவேலரின் கருத்துக்களில் ஆர்வங்கொண்டு, உடல் அழகு, பிள்ளைபெறும் தன்மை, சமையல் திறன், கற்பு ஆகியவை மட்டும் பெண்களுக்கானவையல்ல​. ஆணுக்குப் பெண் சரிநிகர் என்பதில் முக்கியமான பங்காற்றியவர் பெரியார் அவர்கள். 
                            இயேசு கிறிஸ்து, முகமது நபி, குரு கோவிந்த் சிங்,  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மத ரீதியான பின்னணியிலிருந்து பெண்களுக்கான உரிமைகளை போதித்தவர்கள்.
                             இப்படி உலகமெங்கிலும் பெண்களின் நிலை குறித்த பிரகடனங்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. 1948இல் ஐநா சபை வெளியிட்ட உலக மனித உரிமை முழக்கம் என்ற மாநாட்டில் இந்த உலக மனித உரிமை பிரகடனம் இனம், நிறம், பாலினம், மொழி, மதம், கருத்து, ஆஸ்தி, சிறப்பு அந்தஸ்து மாதிரியான வேறுபாடுகளையும் தாண்டி எல்லா மனிதர்களும் சமமானவர்களே என்று கூறியது. 2020லும் இவை சாத்தியமாகிவிட்டதா? எல்லாரும் சமமாகி விட்டார்களா? என்ற கேள்வியோடே நாம் சுற்றித் திரிகிறோம். 
                            வீரம், விவேகம், மேன்மை, தன்னிறைவு என்று நிறைகுடமாயிருந்த ஆண்கள், பெண்களை சமமாக நடத்தியதையும், கோழைத்தனம், தாழ்வு மனப்பான்மை சுய​ இகழ்ச்சி என்று அறைகுடமாக​ இருந்த​ ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தியதையும் இந்த புத்தகம் நெடுகிலும் கூறியிருக்கிறீர்கள். 
                            பெண்ணை அடிமைப்படுத்த ஆண்கள் முயற்சித்த மிக மோசமான யுத்தி இன்ஃபிபுலேஷன் என்னும் பெண்களின் கலவி உணர்ச்சி நீக்கும் சதி. அடுத்தது, கற்புப்பட்டி என்னும் இரும்புப்பூட்டு. அடுத்தது, தான் ஆணைவிட தாழ்ந்தவள்தான் என்று பெண்ணே கருதும் வண்ணமாக செய்யப்பட்ட மூளைச்சலவை. 
                             பெண் ஏன் அடிமையானாள் என்பதை விட பெண் எப்படி அடிமைப்படுத்தப்பட்டாள் என்பதற்கு நற்சான்று இப்புத்தகம். 
                              முற்காலத்தில் தெய்வமாக​ வணங்கப்பட்ட பெண், எவ்வாறு பிறரால் தாழ்த்தப்பட்டாள். பின் பெண்ணின் மறுமலர்ச்சி காலம் எப்போது துவங்கியது போன்ற பல்வேறு செய்திகளும் மனிதப் பெண்ணின் வரலாற்றை அறிய ஏதுவாக இருக்கிறது. 
                             உங்கள் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடரட்டும். அதனால் எண்ணிலடங்கா மனிதர்கள் பயன்பெறட்டும். உங்கள் கைகளை இறுகப் பற்றி எனது அன்பை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.

அன்புடன்...
 ஹேமா

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு