அன்பின் எழுத்தாளர் திரு. அ. மார்க்ஸ் அவர்களுக்கு,
நலம். நலமறிய விழைகிறேன். உங்களின் பெரியாரியப் பார்வை என்னை உங்கள் எழுத்துக்களின் பக்கம் திரும்பவைத்திருக்கிறது. பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகளின் மீதான ஒரு கவன ஈர்ப்பு என்னும் புத்தகத்தின் மூலம் பல்வேறு பெரியாரிய சித்தாந்தங்களின்
தெளிவை என்னால் உணர முடிந்தது.
குலாபிமானம், மதாபிமானம், பாஷாபிமானம், தேசாபிமானம்
என்ற எதுவும் தேவையற்றது எனும் சித்தாந்தமும், அதில் அடங்கியுள்ள
நுண் பொருளும் வியக்கத்தக்கவை. அந்த புத்தகத்தை பற்றிய என்
கருத்துக்களை காணொளியாக்கி விட்டமையால், இன்று நான் படித்து
முடித்த பெரியார், தலித்துகள்.
முஸ்லிம்கள், தமிழ் தேசியர்கள் என்னும் புத்தகத்தை பற்றி சில
விவரணைகளை எழுத முனைகிறேன்.
பெரியாரின்
கருத்துக்களை ஏற்பவர்கள் எப்படி காலங்காலமாக இருந்திருக்கிறார்களோ அதைப் போலவே
பெரியாரை எதிர்ப்பவர்களும் காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக
இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள்.
பெரியாரையே சிந்தனையாளர்
இல்லையென்றால் பின் யார்தான் சிந்தனையாளர்? சாக்ரடீஸ்
எதையும் எழுதி வைக்கவில்லை என்பதனால் அவர் சிந்தனையாளர் இல்லையா? என்ற உங்கள் கேள்வி மிக உண்மையானது.
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு தனி பள்ளிக்கூடம் தனிக்கோயில் தனிக்கிணறு போன்றவைகளுக்காக காந்தி, ரூபாய் 55 ஆயிரம் அனுப்பியபோது அப்படி செய்வதால்
தீண்டாமை ஒருநாளும் அழிந்து போகாது.
பொதுக்கிணறு, பொதுப்பள்ளிக்கூடம் பொதுக்கோயில் என எல்லாமும் பொதுவாக இருக்க வேண்டும். அதை தாழ்த்தப்பட்ட மக்களும் புழங்க வேண்டும்.
அப்படி செய்வதால்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று தீர்க்கமாக கூறிய
தீர்க்கதரிசியின் குரல் உங்கள் எழுத்துக்களில் ஒலித்திருக்கிறது.
நாம்
தமிழர்கள். சூத்திரர்கள் அல்ல, இந்துக்கள்
அல்ல போன்ற பெரியாரின் பல்வேறு பேச்சுகளின் தொகுப்பு விடுதலை மற்றும் தாய் மண்
போன்ற நாளிதழ்களில் வெளிவந்தது இந்த கட்டுரைத் தொகுப்பில் செம்மையாக
ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
பெரியாரிய
எதிர்ப்பை செய்த சில மனிதர்களின் பிற்பாடு வாழ்க்கை, அவர்கள்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை என்று பல்வேறு விமர்சனப் பார்வையோடு
தொடர்கிறது இந்நூல்.
பெரியாரையும்
அயோத்திதாசரையும் குறித்த பொதுப் பார்வை எங்ஙனம் உள்ளது,
பெரியாரின் அரசியல் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன்மாதிரியாக கொள்ள இயலாததாக
இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
பௌத்தத்தின்
முக்கிய கூறுகளும், பெரியாரின்,
இடதுசாரி அறிஞர்களின் கடவுள் மறுப்பும் சந்திக்கும் புள்ளியையும் பல்வேறு
விளக்கங்களுடன் கூறியிருக்கிறீர்கள். கடவுளை கூட ஏற்றுக்
கொள்ளலாம் ஆனால் சாதியை ஏற்றுக் கொள்ளவே இயலாது என்று ‘மகாபோதி’ கழகத்தில் புத்தர் விழாவில் பெரியார் பேசிய உரை கவனிக்கத்தக்கது.
அம்பேத்கரின்
பௌத்தத்திற்கும். அயோத்திதாசரின் பௌத்தத்திற்கும் கூட
வேறுபாடுகள் உண்டு. சமத்துவம் சகோதரத்துவம், விடுதலை என்கிற அரசியல் சார்ந்த கொள்கைகளை அம்பேத்கர் முதன்மைப்படுத்தினார். அயோத்திதாசர் ஒழுக்கம் சார்ந்த பஞ்சசீலக்
கருத்துக்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தார் என்னும் வார்த்தைகளிலிருந்து நாம்
அம்பேத்கரையும், அயோத்திதாசரையும்,
பௌத்தத்தையும் முழுமையாக கண்டறிய வேண்டும் என்பது விளங்குகிறது.
ஒரு நூலின்
கருத்துக்கள் நம்மை பல நூல்களை நோக்கி நகர்த்துமேயானால்,
அந்த நூலினால் ஏற்படும் கேள்விகளின் பதில் காண நாம் விரைவோமேயானால் அது ஒரு
நேர்மறையான நிலைதானே. அப்படி பல கேள்விகளையும் அதை நோக்கிய
பயணத்தையும் தந்திருக்கிறது உங்களின் இந்நூல் என்றால் அது மிகையல்ல.
திருமணம்
குறித்தும், கற்பு குறித்தும்,
சோதனைக்குழாய் குழந்தை குறித்தும் பெரியார் பேசிய கருத்துக்கள் மிக நுட்பமானவையாக
உள்ளன.
ஐயா
பெரியாருக்கு இணையாக வரலாற்றில் புத்தரையும் அம்பேத்கரையும் மட்டுமே சொல்ல இயலும். உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்றார் பெரியார். நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரு முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல்
தலைவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
பெரியார், ஒருபுறம் கடவுள் மறுப்பை செய்கிறார் அதற்கு காரணம் நாம் அறிவோம். மதம் என்ற பெயரிலும் சாதி என்ற பெயரிலும் நம் சமத்துவம் பறிக்கப்படுகிறது
என்பதால்தான் அவர் கடவுள் மறுப்பை பேசினார். மற்றொருபுறம்
இஸ்லாமை ஆதரித்தார் இஸ்லாமையும் அவர் முழுமையாக ஆதரிக்கவில்லை. அந்த மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் எதிர்த்தார். மதமும் பகுத்தறிவுக்கு உட்பட்டதே. பகுத்தறிவுக்கு
ஒவ்வாதவற்றை மதத்தின் பெயரால் ஏற்க இயலாது என்று கூறினார்.
உலகின் மதங்கள் ஒழிக்கப்பட
வேண்டியவை அப்படி இருக்கும்போது மதம் என்ற ஒன்று கட்டாயமாக மனிதர்களுக்கு
வேண்டுமாயின் அது இஸ்லாமாக இருக்கட்டும் என்பதே பெரியாரின் பார்வையாக
இருந்திருக்கிறது. அவர் இஸ்லாம் மதத்தை ஆதரித்ததற்கான காரணமும் சமத்துவ நோக்கேயன்றி
வேறில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள் ஐயா மார்க்ஸ் அவர்களே.
மதம் ஒரு மது என்று ஒரு முதியவர் சொல்ல, இல்லை மதம் ஒரு விஷம் என்று கூறிய பெரியாரின் வார்த்தைகளை நாம் மறந்துவிட
இயலாது. பெரியாரிய சிந்தனைகளை தாங்கி நிற்கும் இன்னும் பல
நூல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
அன்பும்
நன்றியும்
ஹேமா… 
Comments
Post a Comment