கடிதம் 2 -அன்பின் எழுத்தாளர் திரு .கோபி கிருஷ்ணன் அவர்களுக்கு
அன்பின் எழுத்தாளர் திரு .கோபி கிருஷ்ணன் அவர்களுக்கு,
இறந்தவர்கள்
இறைவனாகிறார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால்
லெளகீக துன்பங்களிலிருந்து விடுபட்டவர்களாய் நலமுடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
மறைந்த
எழுத்தாளர்களுக்கு கடிதம் என்பது சற்று வினோதமாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. மறைவென்பதும் இறப்பென்பதும் மனித
உடலுக்கு மட்டும்தானே.
என் முன்னோர்கள் வள்ளுவனையும்,
பாரதியையும் பாரதிதாசனையும் நினையா நாள் உண்டா. ‘கோபிகிருஷ்ணன் படைப்புகள்’ என்ற நூலிலிருந்துதான் நீங்கள்
எனக்கு அறிமுகமானீர்கள், இல்லை
வாழ்க்கை எனக்கு அறிமுகமானது.
அடித்தட்டு மக்களின்
அகம்,
புறம் பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் சுய எள்ளலோடு கடந்துவிடுகிறீர்கள். ‘சுயபச்சாதாபம்’ என்பது வேறு. ‘சுயஎள்ளல்’ என்பது வேறு. இதில் இரண்டாவதை, நீங்கள் புத்தகம்
நெடுகிலும் பயன்படுத்தியிருப்பது உங்கள் எழுத்துக்களுக்கான துருப்பு சீட்டு.
நீங்கள்
மருத்துவராகவும்,
நோயாளியாகவும் உளவியல் அறிந்த மேதை. மிகப் பாதுகாப்பாக, நல்லவர்கள் வேடமிட்டு
வாழும் மனிதர்களின் அகத்தை எவ்வளவு பட்டவர்த்தனமாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.
நான் ஒரு யோகா ஆசிரியை. மனம் என்ற தலைப்பில்
பயிற்சி அளிப்பவள்.
வெளி மனம்,
ஆழ்மனம்,
ஆல்பா நிலை,
பீட்டா நிலை, தீட்டா
நிலை, டெல்டா
நிலை என்றெல்லாம் படித்ததை வகுப்பறையில் உளருபவள்.
உங்களின் ஒரே ஒரு
உரையாடல் ‘மனம்
என்பது ஒரு பிரமைதானே என்று நண்பன் சொன்னான், உண்மைதான். சிந்திக்க வேண்டிய
விஷயம் என்று சொன்னேன்’
இந்த வார்த்தைகளிலிருந்து என் தேடலும், பார்வையும் விசாலமாகவும், வேறு பல கோணங்களிலும் விரிந்து
கொண்டே இருக்கிறது.
பைத்தியம்
என்னும் வசையை பிறரிடமிருந்து பெறாதவர்கள் நம்மில் யாரும் இருந்துவிட முடியாது. பிறழ்வு, மனநல பாதிப்பு, பைத்தியம்
போன்ற சொல்லாடல்களின் உச்சத்தையும், மிச்சத்தையும்
உங்கள் எழுத்துக்கள் ஊடுருவி வெளிவந்திருக்கிறது.
மனித மனங்களுக்குள் கூடுவிட்டு கூடுபாயும் சித்து தெரிந்தவர் போல மனிதர்களின் மனப்பித்தை, மன பிதற்றல்களை
எழுத்துக்களாய் வடிக்கும் உங்கள் எழுத்துக்களுடனான என் சினேகம் மேலும் தொடரும்…

Comments
Post a Comment