கடிதம் 1 - அன்பின் எழுத்தாளர் திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு,


அன்பின் எழுத்தாளர் திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு,

                        நலம். நலம் அறிய விழைகிறேன். இது கடிதத்திற்கான சம்பிரதாயம் மட்டுமல்ல, ஒரு சகோதர பாவத்தோடு உங்கள் நலமறிய விழைகிறேன்.

                       உங்கள் சிறுகதை தொகுப்பான தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் படித்த கையோடு, எழுதிக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு வெளியாகி உள்ள இப்புத்தகத்தில், காட்சிகள் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பதுதான் வேதனை. பெரிய புனைவுகள் இல்லாமல் உங்கள் பால்யத்தின் சுவடுகளை, சீழ் பிடித்த ரணங்களை, நினைவுகளை கதைகளாக நிரப்பி இருக்கிறீர்கள்.

                கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது என்று கூறிய இயக்குனர் ராம் அவர்களின் வரிகள் எவ்வளவு உண்மையானது.

               உங்களோடு நாங்கள் செய்து கொள்ளும் சமரசம் என்பது எம் தலைமுறைக்கு யாம்  அருந்த கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்.’ நாம் அருந்திக் கொண்டிருக்கும், அருந்த கொடுத்திருக்கும் சமரசம் எனும் விஷம் தலைக்குள் ஏறுவதற்குள், உயிரை காப்பாற்றிக்கொள்ள துடிக்கிறது.

             யாரோ இந்த கூட்டத்தில் வீசிய, வீசுகிற, வீசப்போகிற கல், மிகச்சரியாய் விழ வேண்டிய இடத்தில் விழுந்து கலவரங்களை செய்துவிடுகிறது எல்லாப் புரட்சி போராட்டங்களிலும்.

           தனிமையை கவ்விக் தின்னும் பன்றிகள்
                                           இறந்து போன தாய் பன்றியின் கருகிய காம்போடு மல்லுக்கட்டி, கவ்வி தின்று கொன்று கொண்டிருக்கும் பன்றிக்குட்டிகள் அவனையும் சேர்த்து தின்கிறது. இந்த அவன் எத்தனை இலட்சம் மக்களை குறிக்கும் தம்பி மாரி.

                     தன்னை கம்யூனிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் என்னைப் போன்ற சாமானியர் முதல், கலைஞர் கருணாநிதி வரை கம்யூனிச சித்தாந்தங்களை ரத்தத்தில் ஊற வைத்திருக்கிறோம். உங்கள் கதையில் வரும் அப்பாதுரை மாமா{க்கள்} மேடைகளில் மட்டும் கம்யூனிஸ்டாக இருப்பது நமக்கு புதிது இல்லையே.

              அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள் என்ற முதல் கதையில் ஒரு நாயின் வாக்குமூலம் தன் பிறப்பு, பால்யம், முதுமை மரணம் என்று துள்ளத் துடிக்க ஒரு நாய் இறந்ததில் நம் பங்கும் இருப்பதாய் தோன்றியது.

            கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் இது அம்பேத்கர் சொன்னது. செய் அல்லது செத்துமடி இது  காந்தி சொன்னது. இரண்டையும் ஒன்று சேர்க்காதே! என்பதில் உள்ள அரசியல் மிக முக்கியமானது.
          
              வெள்ளைக்கார வம்சம் காந்திய ரயில ஏத்த மாட்டேனே சொல்லுச்சு, காந்தி வம்சம் அம்பேத்காரை ஏத்த மாட்டேனே சொல்லுச்சு, அம்பேத்கார் வம்சம் உன்னிய ஏத்த மாட்டேன்னு சொல்லுது. கண்டிப்பா ஒரு நாள் உன்னையும், உன் பன்னிக்குட்டிகளையும் ஏத்தும்'.
இவ்விடத்தில் எரிவது நின்று எரியும் பிணம் கதை மட்டுமல்ல. நின்று எரியும் நம் மனங்களும்தான்.

                மான்கள் ஆவேசமாய் புலிகளை துரத்துகிறது'. வலி தாங்க முடியாமல், நீண்ட நெடுங்காலமாய் சிறைபட்டிருந்த மான்கள் புலிகளை துரத்திதானே ஆக வேண்டும்.

 தொடர்ந்து துரத்துவோம் ஆவேசமாய்.

 நன்றி தம்பி மாரி செல்வராஜ்.

  அன்புடன் ஹேமா...

Comments

  1. ‘வெள்ளைக்கார வம்சம் காந்திய ரயில ஏத்த மாட்டேனே சொல்லுச்சு, காந்தி வம்சம் அம்பேத்காரை ஏத்த மாட்டேனே சொல்லுச்சு, அம்பேத்கார் வம்சம் உன்னிய ஏத்த மாட்டேன்னு சொல்லுது. கண்டிப்பா ஒரு நாள் உன்னையும், உன் பன்னிக்குட்டிகளையும் ஏத்தும்'.

    இத படிக்கிறப்ப ஏன்னு தெரியாம கண்ணீர் வருது... என் தாத்தனும் பூட்டனும் பண்ணுன இந்த கொடுமைய என் பிள்ளை அவனோட சக காலத்தவனுக்கு பண்ணாம இருந்தா அந்த கண்ணீர் தானா நின்னுரும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். மாற்றங்களை எதிர்நோக்கியே இந்த​ வாழ்க்கை நகர்கிறது.

      Delete
  2. சிறப்பு ஹேமா.. கடிதங்கள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் அண்ணா.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு